வேட்டைக்காரனும் ஆஸ்கர் விருதும்

ஆஸ்கர் விருது என்பது அமெரிக்கா நாட்டுக்காரன் அவன் நாட்டில் தயாராகும் படத்துக்கு கொடுக்கும் விருது அந்த விருது நமக்கு கிடைக்கவில்லையே என்பதற்காக நாம் வருத்தப்படக் கூடாது. இவ்வாறு நாம் கூறினால் திராவிடக் குஞ்சு, பிரியாணி பொட்டலம் கூறுகிறான் என்று நமுட்டு சிரிப்பு சிரிப்பார்கள் மேதைக் கூட்டம். ஆனால் மேலே உள்ள வாசகத்தை சொன்னது நம்ம கலைஞானி கமல். அவர் சொன்ன மாதிரியே நம்ம விஜய் ஆஸ்கர் விருதுக்காக படம் நடிக்கிறேன் என்று என்றுமே சொன்னதில்லை. அதனால் அவர் நடிக்கும் படத்தில் வந்து லாஜிக் பார்ப்பவர்களையோ, இல்லை விஜய்யின் ஹேர் ஸ்டைலையோ குறை சொல்பவர்களையோ பார்த்து சிரிப்பதை தவிர வேறு வழியில்லை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இளைய தளபதி நடிக்கிறார் என்றதுமே முதல் நாளே படத்தை பார்த்து விட வேண்டும் என்று தான் நினைத்து இருந்தேன் ஆனால் இடைத் தேர்தல் வேறு வந்துவிட்டதால் படத்தை உடனே பார்க்க முடியவில்லை. இருந்தாலும் இந்த வார கடைசியில் எப்படியும் பார்த்தேவிடுவது என்று முடிவு செய்து பார்த்தும் ஆகியாச்சு. படம் சும்மா சொல்லக் கூடாது இதை மாதிரி படம் பார்த்து எத்தனி நாளாச்சு. படம் ஆரம்பம் முதல் முடியும் வரை விறுவிறுப்பு தான். இதை மாதிரி இன்னொரு படம் விஜய்யினாலே கூட மறுபடியும் கொடுக்க முடியுமா என்பது சந்தேகமே

படம் தூத்துக்குடியில் இருந்து ஆரம்பிக்கிறது. இப்போதெல்லாம் சவுத் பக்கமா போய் படம் எடுப்பது தான் பேஷன் ஆகிவிட்டது போல் தெரிகிறது. சூர்யா நடிக்கும் சிங்கம் படம் கூட தூத்துக்குடி வட்டாரப் பகுதியில் தான் படமாகிக் கொண்டிருக்கிறது. படத்தின் இயக்குநர் பாபு சிவன் கில்லி புகழ் தரணியின் சிஷ்யராம். குருவை மிஞ்சிய சிஷ்யராக இருப்பார் போல் தெரிகிறது. கில்லி, தூள், தில், குருவி ஆகிய படங்களில் இருந்த வேகமான திரைக்கதையை ஒரே படத்தில் கொண்டு வந்து இருக்கிறார், படத்தின் இசை விஜய் ஆண்டனி மனுசன் பிரிச்சி மேய்ஞ்சுட்டார். புலி உறுமுது புலி உறுமுது பாடலில் பாட்ஷா படத்தில் வரும் பாட்ஷா பாரு பாட்ஷா பாரு பாடலில் வரும் அதே வேகம். இளைய தளபதியிடமும் ரஜினியிடம் இருக்கும் அதே வேகம்

இளைய தளபதியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இனி அவரை அடிக்க வேண்டும் என்றால் படத்தில் ஒரு பாடலில் வரும் அவரது வாரிசு தான் வர வேண்டும். அனுஷ்காவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் தமிழ் நடிகைகளில் அடுத்த நம்பர் ஒன் இடத்தை அவருக்கு இப்போதே அவருக்கு ரிசர்வ் செய்துவிடலாம்

யோகி

இந்த படத்தை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக நீங்கள் இதன் விமர்சனத்தை வாசித்து இருப்பீர்கள். ஏனெனில் அமீர் நடிக்கிறார் என்பதால் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த படம். அதே காரணத்துக்காக தான் நானும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக எந்த விமர்சனத்தையும் வாசிக்காமல் இருந்துவிட்டேன். அது என் தவறு தான்.

புதியபாதை பார்த்திபன் மாதிரி கேரக்டர் தான் இந்த படத்தின் ஹீரோ. புதியபாதை ஹீரோ மாதிரி சின்ன சின்ன தவறுகள் செய்யாமல் நம்ம யோகி போதை, ஓடும் பஸ்ஸில் கொலை, கொள்ளை, கடத்தல் என்று கொஞ்சம் பெரிய ரேஞ்சில் சட்டத்தை மீறுகிறார். ஆனால் இதை எல்லாம் யாருக்காக செய்கிறார் என்று தெரியவில்லை. இப்படி எல்லாம் நம்ம யோகி அசால்டாக பல சாகசங்களை செய்தாலும் அவரை பற்றி போலீஸுக்கும் எதுவும் தெரியவில்லை அந்த ஏரியா தாதாவுக்கும் தெரியவில்லை

இப்படி போய்க் கொண்டிருந்த யோகி வாழ்வில் ஒரு குழந்தை குறுக்கிடுகிறது. அந்த குழந்தை மீது யோகிக்கு ஒரு ஈர்ப்பு வரவே அவரின் வாழ்க்கையில் ஏதோ மாறுதல் ஏற்படுகிறது. அந்த குழந்தைக்காக யோகிக்கு ஒரு பெண்ணுடனும் நெருக்கம் ஏற்படுகிறது. அந்த பெண்ணின் சொல்லைக் கேட்டு குழந்தையை அதன் பெற்றோர்களிடம் ஒப்படைக்க செல்லும் போது யோகி கொல்லப்படுகிறார்

இந்த படத்தில் எல்லோரும் ஓரளவுக்கு நடிக்க முயற்சி செய்து இருக்கிறார்கள் ஒரே ஒருவரை தவிர அது தான் நம்ம அமீர். உடம்பை நன்றாக முறுக்கேற்றி வைத்து இருந்தாலும் அவர் குரல் ஒரு ஹீரோவுக்கான குரலாக தெரியவில்லை. நன்றாக சண்டை போடுகிறார் நன்றாக ஆடுகிறார் ஆனால் நன்றாக நடிக்க தான் மாட்டேன்கிறார். பல இடங்களில் அந்த கால டி.ராஜேந்தர் படத்தை பார்த்த எஃபெக்ட் ஏற்படுகிறது. தெலுங்கு பெண்ணாக வருபவர் நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார். குழந்தையின் பெற்றோர்களாக வருபவர்கள் ஆங்கிலத்தில் பேசிக் கொள்வது மிகவும் நாடகத் தனமாக இருக்கிறது. கிளைமேக்ஸில் ஒரு டச் வைப்பதற்காகவே கஞ்சா கருப்பு படத்தில் இருக்கிறார்

இந்த படத்தால் தெரிந்து கொள்ளும் நீதி என்னவென்றால் ஓவர் பில்டப்பும் ஓவர் எதிர்பார்ப்பும் எந்த ஒரு படத்துக்கும் ஒத்துவராது என்பது தான்