பிரியாணி பொட்டலம் - 07.10.2009

பலரும் தங்கள் எண்ண ஓட்டங்களை ஏதாவது ஒரு பெயரை இட்டு அழைத்து பதிவு செய்கிறார்கள். இவ்வாறு எழுதுவது பெரும்பாலும் பிரபல பதிவர்கள் தான். பிரபல பதிவர்களை பின்பற்றுவது தானே என்னை போன்ற வளரும் பதிவர்களுக்கு அழகு. அதான் இந்த பிரியாணி பொட்டலம். பிரபலங்களின் தொகுப்புகளை நீங்கள் வாசித்து இருப்பீர்கள். அதில் அவியல் மிகவும் பிரபலம், "எண்"ணங்கள் என்ற எண்ணக் குவியல்கள், குவியல் என்ற கருத்து குன்று, கொத்து பரோட்டா என்ற செய்தி கைமா, காக்டெயில் என்ற கருத்து கலவை - இவை எல்லாம் நான் தொடர்ந்து வாசிப்பவை. தோழர் ஜாக்கி சேகர் சாண்ட்விச் என்று எழுதுகிறார் அதில் நான்வெஜ் தூக்கலாக இருக்கிறது. இந்த வரிசையில் தான் இந்த முயற்சியும்

என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்த போது முதலில் தோன்றியது சுண்டக்கஞ்சி தான். ஆனால் நாம் வைக்கும் பெயர் நாம் இயங்கும் தளத்துடன் ஒத்து இருந்தால் மிகவும் நன்றாக இருக்குமே என்று வழக்கம் போல் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டே நினைத்த போது தோன்றிய பெயர் தான் இது. பிரியாணி என்பது திராவிட அரசியலில் பிரிக்க முடியாத அங்கமாயிற்றே. அறிஞர் அண்னா காலத்தில் உடன்பிறப்புகளை பற்றி சொல்லும் போது, அவர்கள் சிங்கிள் டீயை குடித்துவிட்டு கட்சிக்காக உழைப்பவர்கள் என்று சொல்வார்கள். ஆனால் மாறிவரும் காலத்தில் வெறும் டீயை மட்டும் குடித்துவிட்டு கட்சிக்காக உழைப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள்

/\*/\

ராமதாஸ் எதிர்பார்த்தபடியே மீண்டும் கூட்டணி தாவ தயாராகிவிட்டார். அவரின் இந்த செயல் புதியது அல்ல என்பதால் அதை பற்றி எழுதி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதற்கு அவர் சொன்ன காரணத்தை கேட்டால் நீங்களும் சேர்ந்து சிரிப்பீர்கள். அ.தி.மு.க.வில் சுயமரியாதைக்கு இடமில்லை என்பது தான் அவர் சொன்ன காரணம். கூட்டணி கட்சியாக இருந்த போதும் இன்னும் அம்மாவை சந்திக்கும் அருள் மட்டும் இறுதிவரை அவர்களுக்கு கிடைக்கவே இல்லை. இதனால் நொந்து நூடுல்ஸாகி போன ராமதாஸ், கலைஞரை சந்திக்க விரும்பினால் பத்தே நிமிடங்களில் சந்தித்து விட முடியும் என்று சொல்லி இருக்கிறார். எல்லாம் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம். கலைஞர் வழக்கம் போல் மறப்போம் மன்னிப்போம் என்று சொல்லி இது மாதிரி ஆட்களை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வார். உடன்பிறப்புகள் தான் பாவம் ராமதாஸின் அடிபொலிகளிடம் அரவணைத்து போக வேண்டும்

/\*/\

சில நாட்களுக்கு முன் தோழர் அபி அப்பா அண்ணன் அழகிரியுடன் போனில் பேசினேன் என்று சொன்ன போது பலரும் அவரை பார்த்து நையாண்டி செய்தார்கள். சிலர் பழகிரியை குரூப் சேட்டுக்கு அழைத்து இருக்கிறேன் என்று பதிவிட்டு பகடி செய்து இருந்தார்கள். நேற்றைய செய்தியில் வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் அண்ணன் அழகிரிக்கு செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும் அதை பார்த்த அண்ணன் அவர்களுக்கு உதவியதாகவும் செய்தி வந்துள்ளது. இப்போது பரிகாசம் செய்தவர்கள் எங்கே தங்கள் முகத்தை வைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் இந்த செய்தியை படித்தார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த செய்திகள் எல்லாம் அவர்கள் கண்களில் தட்டுப்படுவதில்லையோ என்னவோ. இருந்தாலும் அவர்களுக்காக இந்த சுட்டி

http://thatstamil.oneindia.in/news/2009/10/04/tn-alagiri-rescues-18-tamil-tourists-from-manthral.html