ஒபாமா ஆரம்பித்த சமூக புரட்சித் தீ உலகெங்கும் பரவட்டும்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்று உலகின் மிக சக்தி வாய்ந்த பதவியை எட்டிவிட்டார். ஊடகங்கள் ஒரு கறுப்பினத்தவர் பெற்ற வெற்றியாக இதை சித்தரிக்கின்றன. உண்மையில் ஒபாமா முழு கறுப்பினத்தவர் அல்ல அவருடைய தந்தை கறுப்பினத்தவராக இருந்தாலும் அவரது தாயார் வெள்ளை இனத்தவர். ஒரு பாதி கறுப்பினத்தவர் அமெரிக்க அதிபர் ஆவதே இவ்வளவு கடினம் என்றால் ஒபாமாவின் வெற்றி நிச்சயம் போற்றத்தக்கதே. இதில் இன்னொரு கோணமும் இருக்கிறது. அமெரிக்கா என்பது ஒரு குடியேற்ற நாடு. பல நாடுகளில் இருந்து வந்து குடி ஏறியவர்களை கொண்ட நாடு தான் அமெரிக்கா, இப்படிப்பட்ட கலவையான சமூக அமைப்பில் எந்த ஒரு இனத்தை சேர்ந்தவரும் அதிபர் ஆகலாம். இதுவே முழுக்க முழுக்க வெள்ளைக்கார் நாடான பிரிட்டனிலோ இல்லை பிரான்ஸிலோ இதே மாதிரி ஒரு கறுப்பினத்தவர் பிரதமர் அல்லது அதிபர் ஆவது தான் உண்மையான புரட்சியாகும். இருந்தாலும் இது ஒரு மிக முக்கியமான நிகழ்வு என்பதி சந்தேகமில்லை

நம்மில் சிலர் அமெரிக்காவில் யார் அதிபர் ஆனால் நமக்கு என்ன என்ற கேள்வியை முன் வைக்கின்றனர். இந்த அமெரிக்க தேர்தல் வெறும் ஒரு அரசியல் சம்பிரதாயமாக மட்டும் இருந்தால் அவ்வாறு சொல்பவர்களுடன் முழுவதும் ஒத்துப் போகலாம். ஆனால் இந்த தேர்தல் முடிவு உலகம் முழுவதுமே பொருளாதார மற்றும் சமூக விளைவுகளையும் ஏற்படுத்த வல்லது என்பதால் இந்த தேர்தல் பற்றி நாம் அக்கறைப்படும் அவசியம் ஏற்பட்டுவிடுகிறது

இந்தியாவில் உள்ள எந்தவொரு மென்பொருள் நிறுவணமும் முழுக்க முழுக்க நம் நாட்டின் உள்நாட்டு தேவைக்காக மட்டுமே இயங்கவில்லை. பெரும்பாலான மென்பொருள் நிறுவணங்கள் அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு சந்தையை மையமாக வைத்தே இயங்குகின்றன. அதனால் அமெரிக்கா மட்டுமின்றி பல நாட்டு அரசியலும் நம்மை பாதிக்கவே செய்யும்

சமூக ரீதியாக பார்த்தால் அமெரிக்காவின் ஒடுக்கப்பட்ட மக்கள் என்று கருதப்பட்ட இனத்தில் இருந்து ஒருவர் அந்நாட்டை ஆள்வதற்கு தகுதி பெற்று இருக்கிறார் என்பது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைய வாய்ப்பு இருக்கிறது. இந்த வெற்றி சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மேலும் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கும்.

மேலை நாடுகளில் தொழில் புரட்சி ஏற்பட்ட போது அது மேலை நாடுகளோடு நின்றுவிடவில்லை அது உலகெங்கும் பரவியது. அதன் பலனை இன்றும் நாம் அனுபவித்து வருகிறோம். அதே போல் முன்னாள் சோவியத்தில் பொதுவுடைமை புரட்சி ஏற்பட்ட போது அது சோவியத்தோடு நின்றுவிடவில்லை. உலகின் பல பகுதிகளுக்கும் அது பரவியது. சீனாவில் சில மாற்றங்களோடு இன்றும் அது வெற்றி கொடி கட்டி வருகிறது. இந்தியாவில் இன்னும் பொதுவுடைமை தாக்கம் இருப்பதால் தான் அமெரிக்காவில் பல வங்கிகள் திவாலானாலும் நமக்கும் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. பொதுவுடைமை சமுதாயத்துக்கு வித்திட்ட தொழிலாளர் பிரச்சினை ஆரம்பித்ததும் இதே முதலாளித்துவ நாடுகளில் தான்


இதே போல் இன்று அமெரிக்காவில் ஏற்பட்டு இருக்கும் சமூகப் புரட்சித் தீ மென்மேலும் பரவ வேண்டும். உலகில் பல்வேறு நாடுகளிலும் ஒடுக்கப்படும் மக்களுக்கு விடியல் பிறக்க வேண்டும்

3 comments:

VSK said...

ஆகக்கூடி, அமெரிக்காதான் உலகுக்கே விடிவெள்ளி என்கிறீர்கள்!

அதுவும் சரிதான்!

:))

உடன்பிறப்பு said...

எல்லா காலகட்டத்திலுமே உலகில் ஏதாவது ஒரு மூலையில் உருவாகும் ஒரு சிறிய பொறி பின்னாளில் புரட்சியாகி உலகெங்கும் பரவும் உலக வரலாற்றை தான் சொல்லி இருக்கிறேன். இது அமெரிக்காவுக்கு என்று மட்டும் அல்லாமல் மற்றைய நாடுகளுக்கும் பொருந்தும் என்பது தான் என் கருத்து

Anonymous said...

//VSK- ஆகக்கூடி, அமெரிக்காதான் உலகுக்கே விடிவெள்ளி என்கிறீர்கள்!
அதுவும் சரிதான்! //
நிச்சியமாக.